வாணியம்பாடியில் சிறுவனுக்கு மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளை.

வாணியம்பாடி, அக்.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் 4-வது முனி தெருவில் வசித்து வருபவர் ஷகீல் அஹ்மத்.இவர் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாஹீன் பர்வீன், மகள் சுஃப்யா மரியம் மற்றும் 10 வயது மகன் முஹம்மத் சுஃபியான் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஷகீல் அஹ்மத் வேலைக்கு சென்றிருந்த நிலையில், மனைவி மற்றும் மகள் அருகிலுள்ள கடைக்கு மாவு அரைக்க சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் சிறுவன் முஹம்மத் சுஃபியான் தனியாக டிவி பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து, சிறுவனுக்கு மயக்க மருந்து தெளித்துவிட்டு, பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளான்.
சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த உறவினர் சபியுல்லா, சிறுவன் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் கடைக்கு சென்றிருந்த சிறுவனின் தாய், சகோதரி ஆகியோர் விரைந்து வந்து தண்ணீர் தெளித்து சிறுவனை எழுப்பியுள்ளனர்.
பின்னர் வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்ததுடன், இரண்டு பீரோக்களும் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சோதனையில் 7 சவரன் தங்க நகை, 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூபாய் 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நகர காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுவனுக்கு மயக்க மருந்து தெளித்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



