தர்மபுரி அருகே வறட்சி காரணமாக உணவும் தண்ணீரும் தேடி கிராமங்களுக்குள் புகும் வனவிலங்குகள் – பொதுமக்கள் அச்சம்!

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அரூர், மொரப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காத சூழலில், மான்கள், முயல்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.
இவ்வாறு ஊருக்குள் வரும் விலங்குகள், அங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் சென்று வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. வனவிலங்குகளின் தொடர் நடமாட்டத்தால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் அச்சமும் பீதியும் நிலவி வருகிறது.
எனவே, வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு, வனப்பகுதியிலேயே விலங்குகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், கிராமங்களுக்குள் விலங்குகள் புகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



