ரயில் பயணிகளை விஷப்பாம்புகளை காட்டி மிரட்டி பணம் பறித்த 6 பேர் கைது!

பீகாரில் ரயில் பயணிகளை விஷப்பாம்புகளை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
சாதாரண மக்கள் அதிகம் பயணிக்கும் ஜன் சேவா எக்ஸ்பிரஸ் ரயிலிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ரயிலின் பொதுப்பெட்டியில் ஏறும் இந்தக் கும்பல், தங்களிடம் இருந்த பைகளில் இருந்து விஷப்பாம்புகளை வெளியே எடுத்து பயணிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், பாம்பை வைத்து கடிக்கச் செய்வோம் என்று பயணிகளை அச்சுறுத்தி பணம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயணி ‘Rail Madad’ செயலி மூலம் அளித்த புகாரைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்துக்கு சென்று 6 பேரையும் காவலில் எடுத்தனர்.
அவர்களிடம் இருந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சுமார் 10 விஷப்பாம்புகள் கைப்பற்றப்பட்டதாக RPF அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் அவர்களை பிடித்தபோது, அவர்கள் குற்றச்சாட்டை மறுத்ததாகவும், தங்களிடம் இருந்த விஷப்பாம்புகளை ரயில் நிலையத்திற்குள் திறந்துவிட்டு பரபரப்பை ஏற்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கும்பல் தொடர்ந்து ரயில்களில் இதேபோன்று பயணிகளை அச்சுறுத்தி பணம் வசூலித்து வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், விஷப்பாம்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது மற்றும் அவற்றை கையாண்டது தொடர்பாக வனத்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



