பெரம்பலூர் மாவட்டம் கல்குவாரி அருகே ஆண் சடலம் மீட்பு; சந்தேக மரணமா?

பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான வெற்றிவேல் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவர் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை வைத்து நெடுவாசல் கிராமத்தில சொந்தமாக வீடு கட்டி இருந்ததால் அதற்காக கிரக பிரவேசத்தை முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் காலையில் மாடு மேய்க்க சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி வந்துள்ளனர். அப்போது கல்குவாரி அருகே ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து அவரது குடும்பத்தினர் கல்குவாரி சென்று பார்த்த போது அங்கு கிடந்தது வெற்றிவேல் என்பது தெரியவந்துள்ளது.இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வெற்றிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



