ஆம்பூரில் அதிர்ச்சி… 3 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 பேர் கைது!
ஆம்பூர், செப் 03

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், தனியார் பள்ளியில் படித்து வரும் 3 மாணவிகளை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளுடன் பழகி வந்த 3 இளைஞர்கள், அவர்களை ஆசைவார்த்தைகள் கூறி காரில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மாலை நேரமாகியும் மாணவிகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, 3 மாணவிகளையும் பள்ளிகொண்டா அருகே பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஆம்பூரைச் சேர்ந்த 18 வயது இளைஞர்கள் இருவர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து மூவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 17 வயது சிறுவன் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும், பள்ளி நிர்வாகங்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.



