பல கோடி நஷ்டத்தால் நடுரோட்டில் கதறித் துடித்த ஜவுளிக்கடை உரிமையாளர்.. ₹10,000 சம்பளப் பகைக்கு ₹24 கோடி சாம்பல்…
“என் வாழ்க்கையே போச்சுடா…!” சூரத்தை உலுக்கிய பகீர் பழிவாங்கல்..!!

சூரத் ஜவுளிச் சந்தையில் நடந்த ரூ. 24 கோடி மதிப்பிலான தீ விபத்து தற்செயலானது அல்ல, நிலுவையில் இருந்த ரூ.10,000 சம்பளப் பகையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்பது அம்பலமாகியுள்ளது. இதற்கிடையே, மொத்த சொத்துக்களையும் இழந்து கதறி அழும் கடை உரிமையாளரின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வினோத் சாவ்லே என்ற முன்னாள் கணக்காளர், தனது முதலாளி ஹனுமான் பிரசாத் ஜவாருக்குப் பாடம் புகட்ட எண்ணி, செப்டம்பர் 8 அன்று பிளாஸ்டிக் பையில் பெட்ரோல் வாங்கி வந்து கடைக்கு வெளியே இருந்த பொருட்களுக்குத் தீ வைத்துள்ளார். ஆனால், அந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி, 17 கடைகளில் இருந்த ரூ. 24 கோடி மதிப்புள்ள ஜவுளிப் பொருட்களை முற்றிலுமாக எரித்துச் சாம்பலாக்கியது.
இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தனது கடையின் அழிவையும் பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் கண்டு தாங்க முடியாமல், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழும் உருக்கமான வீடியோ தற்போது வெளியாகிச் சோஷியல் மீடியாவை உலுக்கி வருகிறது. இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட முதலாளிக்கு மட்டுமே ரூ. 6 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தீ வைத்த பின்னர் தலைமறைவான வினோத் சாவ்லே, ராஜஸ்தான், அயோத்தி எனப் பல்வேறு இடங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளார். இறுதியில் அவரிடம் இருந்த பணம் தீர்ந்த நிலையில், காவல்துறை தன்னைத் தேடுவதை நிறுத்தியிருக்கும் என நினைத்து 12 நாட்களுக்குப் பிறகு சூரத்திற்குத் திரும்பிய போது, சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டார்.
ஒரு ரூ. 10,000 சம்பளப் பிரச்சினைக்காகப் பழிவாங்க நினைத்த நபரால், அப்பாவி வியாபாரிகளின் பல கோடி ரூபாய் மதிப்பிலான உழைப்பு சாம்பலாகியுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதால் சந்தை தற்போது மூடப்பட்டு, பிற வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.



