ஆம்பூரில் தொடர் இருசக்கர வாகன வாகனங்களை திருடிய இருவர் கைது. 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
வாணியம்பாடி, அக்.6-


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆம்பூர் நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்த சல்மான் என்பவர் கடந்த 3ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் எதிரே நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் வாகனம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதுகுறித்து சல்மான் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆம்பூர் பஜார், மோட்டுகொல்லை, நூருல்லாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டுகொல்லை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மற்றும் அப்ராரூர் ரகுமான் என்பது தெரியவந்தது.
இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



