அரசியல்அனைத்து செய்திகள்

“கவலைப்படாம போங்க..” கிளம்பும் நேரத்தில் விஜய்க்கு உறுதியளித்த ஆளுநர்! தவெகவுக்கு நிம்மதி

 


மே 07, வியாழன் கிழமை

தமிழக அரசியலில் நிலவி வரும் பதவியேற்பு இழுபறி இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், மேஜிக் எண்ணைத் தொடத் தவிக்கும் விஜய்யை ஆளுநர் மாளிகை இரண்டாவது நாளாகத் திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கிடையே விஜய்யிடம் ஆளுநர் மிக முக்கியமான ஒரு வாக்குறுதியைக் கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் திங்களன்று வெளியான நிலையில், நேற்று புதன்கிழமை மாலை ஆளுநரை விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், ஆளுநர் தரப்பிடம் இருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை. இதையடுத்து இன்று வியாழக்கிழமை காலை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை மீண்டும் சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறியுள்ளார்.

இருப்பினும், “118 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்துடன் வாருங்கள், அதன் பிறகு பதவியேற்பு பற்றிப் பேசலாம்” என்று ஆளுநர் கூறியதாகத் தெரிகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் உள்ள பிற அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெரும்பான்மையைச் சட்டசபையில் தான் நிரூபிக்க வேண்டுமே தவிர ஆளுநர் மாளிகையில் இல்லை என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும், ஆளுநர்- விஜய் இடையே நடந்த இந்த 2வது சந்திப்பில் ஒரு முக்கியமான திருப்பம் நிகழ்ந்துள்ளது. விஜய் தனது மெஜாரிட்டியை திரட்ட அவகாசம் கேட்டபோது, ஆளுநர் ஒரு உறுதியை அளித்துள்ளார்.. அதாவது 118 இடங்கள் இல்லை என்றால்.. (திமுக, அதிமுக உட்பட) வேறு எந்தக் கட்சியையும் ஆட்சி அமைக்க அழைக்க மாட்டேன் என ஆளுநர் விஜய்க்கு உறுதியளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஆளுநர் விஜய்யிடம் கூறியுள்ள இந்த தகவல்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

தவெகவின் நிலைமை

விஜய் இரு இடத்தில் போட்டியிட்டுள்ள நிலையில், ஒரு சீட்டை ராஜினாமா செய்வார். எனவே, தவெக 107.. இத்தோடு காங்கிரஸ் 5 எம்எல்ஏக்கள் சேர்ந்தால் மொத்த நம்பர் 112ஆகும். இன்னும் 6 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்து இருந்தால் மட்டுமே விஜய்யால் கோட்டைக்குச் செல்ல முடியும். விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்யுடன் கூட்டணி என வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன. இதனால் வரும் நாட்களில் பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ஆட்சி?

தமிழகச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 9ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும். நிலையான ஆட்சியை யாராலும் தர முடியாது என ஆளுநர் கருதினால் குடியரசு தலைவர் ஆட்சியை நோக்கி தமிழகம் நகர வாய்ப்புள்ளது. எனவே, அடுத்த 48 மணி நேரம் முக்கியம்! அதற்குள் ஆளுநர் என்ன செய்கிறார் என்பதே கவனிக்க வைக்கும் விஷயமாக இருக்கிறது.

ஆளுநர் அர்லேகர் ஒருபுறம் 118 கையெழுத்துகளைக் கேட்டு நெருக்கடி கொடுத்தாலும், மறுபுறம் ‘வேறு ஒரு கட்சியை அழைக்க மாட்டேன்’ என்று கூறியிருப்பது விஜய்க்கு ஒரு பெரிய நிம்மதி. ஆனால், இந்த அவகாசம் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளது.


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Enable Notifications for getting latest updates OK No thanks
Enable Notifications for getting latest updates OK No thanks