60 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளத்தை எதிர்கொண்டுள்ள அசாம். ஒரே நாளில் 14 பேர் பலியானதால், உயிரிழப்பு 61-ஆக அதிகரிப்பு.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநிலம் வரலாறு காணாத பாதிப்பைச் சந்தித்து வருகிறது.அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) வெளியிட்ட தகவல்களின் படி,

ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் சராய்தியோ (Charaideo) மாவட்டத்தில் 7 பேரும், சிவசாகர் (Sivasagar) மாவட்டத்தில் 6 பேரும், ஜோர்ஹாட் (Jorhat) மாவட்டத்தில் ஒருவரும் அடங்குவர்.
மாநிலம் முழுவதும் 12 மாவட்டங்களில் உள்ள 856 கிராமங்களைச் சேர்ந்த 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ள நீரால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:

1.சிவசாகர் (Sivasagar): சுமார் 3.48 லட்சம் மக்கள் பாதிப்பு
2.சராய்தியோ (Charaideo): சுமார் 1.88 லட்சம் மக்கள் பாதிப்பு
3.ஜோர்ஹாட் (Jorhat): சுமார் 1.26 லட்சம் மக்கள் பாதிப்பு
விவசாய நிலங்கள்: சுமார் 56,600 ஹெக்டேர் பரப்பளவிலான விளைநிலங்கள் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன அதேபோல் 3.3 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஆடு, மாடு மற்றும் கோழிகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 363 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளப்பெருக்கிற்கான முக்கியக் காரணம் என்ன?
பிரம்மபுத்திரா ஆறு மற்றும் அதன் உபநதிகளான திகௌ, தனசிரி, குஷியாரா ஆகியவற்றில் அபாயக் குறியீட்டைத் தாண்டி வெள்ள நீர் சீறிப் பாய்ந்து வருகிறது. அண்டை மாநிலமான நாகாலாந்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு (Cloudburst) மற்றும் அதைத் தொடர்ந்த தொடர் மழையே இந்த திடீர் வெள்ளப்பெருக்குக்கு மிக முக்கியக் காரணம் என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், சேத மதிப்பிட்டைக் கணக்கிடவும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் மத்திய ஆய்வுக் குழு அசாம் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



