பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவன்! இதன் பின்னணி என்ன?

சென்னை பெருங்குடி குறிஞ்சிநகரைச் சேர்ந்த பாபு லால் – சேனி தேவி தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பாபுலால் அதே பகுதியில் ஒரு அடகு கடை நடத்தி வருகிறார்.அவரது மகன் ராகேஷ் சமீபத்தில் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் வீட்டில் இருந்துள்ளார்.
தந்தை பாபுலால் அவரது உறவினர் இறந்த நிலையில் அதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளார். இந்த நிலையில் இரவு ராகேஷ் அவரது தாய் மற்றும் சகோதரி உறங்கிக் கொண்டிருந்தபோது தாயின் கழுத்தில் துண்டை வைத்து இறுக்கி பிறகு உரலால் கண் மற்றும் முகத்தை நசுக்கி கொலை செய்துவிட்டு உடனடியாக பக்கத்து வீட்டிற்கு சென்று தனது தாயை காப்பாற்றுங்கள் என உதவி கேட்டு அழைத்துள்ளார்.
இதை அடுத்து அங்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிக அளவில் ரத்தம் வெளியேறி ராகேஷின் தாய் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த தகவல் அறிந்து விரைந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் இறந்தவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதை அடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் ராஜேஷை கைது செய்துள்ளனர்.அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று எதற்காக கொலைசெய்தார் என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்ட போது ,பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அவரது உறவினரின் அடகு கடைக்கு அடிக்கடி வேலைக்கு செல்லும்படி கூறி அவரைத் திட்டி வந்ததால் கொலை செய்ததாக ராகேஷ் கூறியுள்ளார்.
இதை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் ராகேஷ் 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த நிலையில் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக சில மாதங்களாக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.



